Wednesday, June 25, 2014

கல்லூரிக் காலங்கள் – கவிதைத் தொடர் சிற்பம்.. கவிதை.. ஓவியம் – 2



கல்லூரிக் காலங்கள் – கவிதைத் தொடர்

சிற்பம்.. கவிதை.. ஓவியம் – 2

 

மனிதன்
சிந்தனை என்பதை
சிலரின் சொத்தாக மட்டுமே
பார்க்கிறான்!
"சிந்தித்தல்" இங்கு ஒரு
சிக்கலான விஷயம்
அதையும் மீறி ஒருவன்
சிந்திக்க ஆரம்பித்தால்
கூட்டம் கூட்டுவான்
பட்டம் கொடுப்பான்
பரிசு கொடுப்பான்
சிந்தனாவாதியைப் புகழ்ந்து வைப்பான்
அவனின்
சிந்தனைகளை இகழ்ந்து வைப்பான்!

மனிதனின் வாழ்க்கை
சத்தங்களின் நடுவே
சஞ்சரிக்கும் வாழ்க்கை!
இயந்திரங்களின்
நடுவே
இழையோடும் வேட்கை!
இங்கு பலர்
இயந்திரங்களைப் பற்றி
யோசித்து யோசித்து
இயந்திரமாகிப் போனார்கள்
இன்னும் சிலர்
மனிதர்களைப் பற்றி
யோசித்து யோசித்து
இயந்திரமாகிப் போனார்கள்
அவர்கள் அறிவியல்வாதிகள்
இவர்கள்
இலக்கியவாதிகள்!
இவை இரண்டிற்குமிடையே
காரணங்களைப் பற்றிக்
கவலைப்படாத
சிந்திக்க விரும்பாதவர்கள்
அலட்சிய வாதிகள்!
மொத்தத்தில் மனிதராக
யாரும் இங்கே இல்லை
பரிணாம வளர்ச்சியின்
மிச்சங்களே

...................

அந்தப் போக்குவரத்து
நெரிசல் மிகுந்த சாலையில்
கம்பீரமாய் காட்சிதரும்
அந்தக்கட்டிடம்...
மனிதர்களும்
"கணித"ர்களும்....
டைப்ரைட்டர்களின்
கவிதைத் தும்மல்கள்
சீரான சந்தம்!
தலைக்குமேல்
கழன்றுவிழும் அபாயத்தோடு
அந்தக்கால மின்விசிறி!
மேஜைகள், நாற்காலிகள்,
"மனிதர்கள்"
அவசரமில்லாத ஒரு பரபரப்பு!
ஐந்தடிக்கக் காத்திருக்கும்
"அலுவலர்கள்".
ஜன்னலின் வழியே
சாயங்கால சூரியன்
"சூர்யா சார் உங்களை
மேனேஜர் கூப்பிடுகிறார்"
அசரீரியா என்ன! இல்லை
அலுவலர் ஒருவரின் குரல்!
அழைக்கப்பட்ட சூர்யா
எழுந்தான்
நடந்தான்.
இங்கே இவனை
அறிமுகப்படுத்த வேண்டிய
அவசியம்! ஏனெனில்
கதையில் பாதியை ஆக்ரமிக்கப்
போகிறவன்! ஆனால்
அடிக்கடி சினிமா பார்க்கும்
நமக்கு
அவனின் அறிமுக வர்ணனை
அவசியமில்லாத ஒன்று!

........................

"வெல்கம் சூர்யா"
வீட்டுக்கு கிளம்பிட்டு இருந்தீங்களா?
"நோ.....சார்.....ஜஸ்ட்
திங் பண்ணிட்டிருந்தேன்
எனி மெஸேஜ் சார்?"
"ஒண்ணுமில்லை
சந்தோஷமான விஷயம்தான்
உங்க யோசனைப்படி
செஞ்சதுனால அந்த
ஐம்பது லட்சம் காண்ட்ராக்ட்
இப்ப நம்ப கம்பெனிக்கு
கிடைச்சிருக்கு!
ஹெட் ஆபீஸிலிருந்து இப்பத்தான்
போன் வந்தது!
எம்.டி.....ரொம்பப் பாரட்டினார்"
"தேங்க்யூ.....சார்......இது
என்னோட கடமை"
".கே! .கே! இன்னொரு விஷயம்.
இந்த வருஷத்திலேயே
உங்களுக்கு ப்ரமோஷன்
கிடைக்கும்னு நினைக்கிறேன்.
பெஸ்ட் ஆஃப் லக்"
புன்னகைத்தான்..
நன்றி சொல்லிப் புறப்பட்டான்!
மனத்திற்குள் மகிழ்ந்தாலும்
அலட்டிக் கொள்ளாத நடை
அலட்சியமில்லாத வேகம்..
இருக்கைகள்
காலியாய் இருந்தன!
அலுவலகம் விட்டு வெளிப்பட்டான்
வண்டி எடுத்துப் புறப்பட்டான்
காற்றில் கலக்கும்
நறுமணமாய்
போக்குவரத்தில் கலந்தான்!
..........

வாசலில் நிறுத்தி
உள்ளே வந்தான்!
"ஹேய்....எப்படா வந்த?
விழா எப்படி நடந்தது?".
வாட்ச், சட்டையைக் கழற்றிக்
கொண்டே, அமர்ந்திருந்த அவனைத்
தாண்டிச் சென்றான்!
கேள்வி கேட்கப்பட்டவன்
ஒரு ஒற்றை ரோஜாவைக்
கையில் வைத்து
எதைப்பற்றியோ யோசனையில்
மூழ்கிப் போயிருந்ததான்"
அங்கே முகம் கழுவும் சப்தம்..
"ஸாரிடா இன்னைக்கு
முக்கியமான போர்டுமீட்டிங்
அதான் வரமுடியல
நல்லா நடந்துச்சா?"
மௌனமே பதிலாக வந்தது..
அவனின் ரோஜா
ஆராய்ச்சி தொடர்ந்தது!
முகம் துடைத்தபடி
அவன் உள்ளே வந்தான்
"ஏய் என்னடா ஆச்சு?
அந்த ரோஜாவில் அப்படி என்ன
இருக்கு! இவ்ளோ நேரம்
கேக்குறேன் பதில் சொல்லாம
அதையே பார்த்திட்டிருக்க?"
".......ம்.......ம்......ஒண்ணுமில்லே...
காபி, ப்ளாஸ்கில் ஊத்தி
வைச்சிருக்கேன் எடுத்துக்க"
ப்ளாஸ்க்கை எடுத்தபடி
அருகில் அமர்ந்தான்.
"இந்தா உனக்கு..
ம்...இப்ப சொல்லு உங்க
பிரிவு உபசார விழா எப்படி நடந்துச்சு?
இந்த ரோஜாவை வச்சு என்ன பண்ணிட்டிருக்க?"
கேட்டவனைப் பார்த்து
அமைதியாகப் புன்னகைத்தான் அவன்!
என்னவென்று இவனிடம் சொல்ல?
புற்களின் மத்தியில்
ஒரு பூவைப் பார்த்தேன்
என்று சொல்லவா?
அலைகடல் நடுவே ஓர்
ஆச்சர்ய தேவதை
வந்தாள் என்று சொல்லவா?
தான் தலையில் சூடிய
பூவை எடுத்து
ஒரு பூ தன்கையில்
தந்ததைச் சொல்லவா?
இடியோசை நடுவே ஒரு
சந்தோஷ மின்னல்
வெட்டியதைச் சொல்லவா?
அவளின் பெயர் என்னவாக
இருக்கும்!
இத்தனை நாள் எப்படி நான்
பார்க்காமல் இருந்தேன்!
அத்தனை பேர் மத்தியில்
ஓடிவந்து என்னமாய் பூக்கொடுத்தாள்?
".......டேய்......எந்த உலகத்துலடா இருக்க!
கையில ஒரு ரோஜா..
முகம் பேயறைஞ்ச மாதிரி இருக்கு
ஒரு மாதிரியா வேற சிரிக்கற
சம்திங்.....ராங்டா
ஏண்டா எவள்டயும் ...லவ்..யூ
சொல்லி அடிவாங்கினியா?
...................
இதுக்கும் சிரிப்புத்தானா?
மஹூம் நீ தேறமாட்டே!
ஆமாம் பீஸ் கட்டறதுக்கு
நாளைக்கு லாஸ்ட் டேட்டுன்னு
சொன்னியே கட்டிட்டியா?"
நிமிர்ந்தான், ரோஜாவிலிருந்து
பார்வையை விலக்கி
அவனைப் பார்த்தான்!
"இல்லடா....இன்னும் அப்பாட்ட இருந்து
எம்...... வரல....."
"சரி அதவிடு அது என்ன
கையில லைலாவை பார்க்கப்
போன மஜ்னு மாதிரி ஒரு ரோஜா?"
"ஒண்ணுமில்லடா
ஈவினிங் புரோகிராம் முடிஞ்சதும்
ஒரு பொண்ணு ஓடிவந்து
இத கொடுத்தா"
"ஏய்....ஏய்....யாரு, யாருடா அது
இந்த உம்மனாம் மூஞ்சிக்கு
ரோஸ் குடுத்தாளா?
யார்ரா அது?
அது தான்டா எனக்கும் தெரியல!
ஓவியம் தொடரும்….

No comments:

Post a Comment