ஆறாம் திருமுறை (4501 – 4506)
இது நல்ல தருணம்
சிந்து

அஃதாவது, திருவருள் ஞானத்தைப் பெறுதற்கு வாய்ந்த காலத்தின் இயல் நலம் கூறுவதாம்.
4501.
இதுநல்ல தருணம் - அருள்செய்ய
இதுநல்ல தருணம்.
உரை:
நல்ல தருணம் - தக்க காலம். ஞான வின்ப வேட்கை கனிந்திருப்பது விளங்கத் தலைவி இது நல்ல தருணம் எனவுரைக்கின்றாள்.
4502.
பொதுநல்ல நடம்வல்ல புண்ணிய ரேகேளும்
பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன். இதுநல்ல
உரை:
பொது நல்ல நடம் வல்ல புண்ணியரே - அம்பலத்தில் உயிர்கட்கு நலம் விளைவிக்கும் திருக்கூத்து ஆட வல்லவராகிய புண்ணிய மூர்த்தியே. தக்க தருணம் எனத் தான் உரைப்பதை வற்புறுத்தற்குப் “பொய் யேதும் சொல்கிலேன் மெய்யே புகல்கின்றேன்” என்று தலைவி யுரைக்கின்றாள்.
4503.
மதித்த சமயமத வழக்கெல்லாம் மாய்ந்தது
வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது
கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது. இது நல்ல
உரை:
மதவழக்கு - சமயங்களின் பேரால் கொண்டொழுகப்படும் வழக்கங்கள். இவை உய்தி நல்குவன எனப் பலராலும் கருதப்படுதலின், “மதித்த சமய மத வழக்கு” எனக் கூறுகிறாள். வருணம் - சாதி; ஆசிரமம் - சாதிதோறும் அவ்வவ் பருவத்துக்குரிய ஒழுக்க நிலைகள். பிரமசரியம், இல்வாழ்க்கை, வனவாசம், துறவு என இவை நூல்களில் ஆசிரம வகைகளாகக் குறிக்கப்படுகின்றன. வள்ளற் பெருமான் காலத்தே வானப்பிரஸ்தம் என்னும் வனவாழ்க்கையும் துறவும் வழக்கு வீழ்ந்தமையின், “ஆசிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது” என்கின்றாள். வருண வேறுபாடுகள் மக்களினத்தின் ஒருமைப் பண்பைச் சீர்குலைத்து இனநலத்தைச் சிதறச் செய்தமையின், வருண ஆசிரமங்களைத் தலைவி வெறுத்துரைக்கின்றாள். லோகாசாரம் - உலகியற் பழக்க வழக்கங்கள். கொதிப்பு - ஆர்வ மிகுதி. புலை - புலாலுண்டல்.
4504.
குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
குதித்த மனமுருட்டுக் குரங்கு முடங்கிற்று
வெறித்தவெவ் வினைகளும் வெந்து குலைந்தது
விந்தைசெய் கொடுமாயைச் சந்தையும் கலைந்தது. இது நல்ல
உரை:
வேதாகமக் கூச்சல், வேதமே பிரமாணமாம் என வேதாந்திகளும் ஆகமமே பிரமாணமாம் எனச் சித்தாந்திகளும் தம்மிற் கலாய்த்துக் கொண்ட காலமும் உண்டாகலின், “வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று” எனவுரைக்கின்றாள். குதித்த மனம் - துள்ளித்திரிந்த மனம். மனமுருட்டுக் குரங்கு - மனமாகிய முரணியொழுகிய குரங்கு; முருட்டுக் குரங்கு முரட்டுக் குரங்கு என வழங்குவதுண்டு. அடக்க அடங்காமை புலப்பட, “முருட்டுக் குரங்கு” என மொழிகின்றாள். வெறித்த வினை - பயனில்லாத செயல்கள். வெவ்வினை - தீது பயக்கும் தீவினைகள். குலைந்தது - பன்மை யொருமை மயக்கம். இனிவருமிடங்களிலும் இதுவே கூறிக்கொள்க. விந்தை - வி்பரீதம். கொடுமாயைச் சந்தை - உலகியல் மயக்கமாகிய பேரிரைச்சல். நன்னெறிக்கண் செல்லாமையின், “கொடுமாயை” எனக் குறிக்கின்றாள். நண்பரைப் பகைவராக்கலும், அன்பர்களைத் துரோகிகளாக்குதலும், நற்பண்பாளரைத் தீயவராக்குதலும் உலகியல் மாயையின் விளைவுகளாம்.
4505.
கோபமும் காமமும் குடிகெட்டுப் போயிற்று
கொடியஓர் ஆங்காரம் பொடிப்பொடி ஆயிற்று
தாபமும் சோபமும் தான்தானே சென்றது
தத்துவம் எல்லாம்என் றன்வசம் நின்றது. இது நல்ல
உரை:
கோபம் - சினம். காமம் - பெண்ணாசை. குடிகெடுதல் - நிலையிழந்தழிதல். ஆங்காரம் - ஆணவமாகிய குற்றம். தாபம் - சுருங்குதல். சோபம் - விளக்கம். தத்துவம் - நிலம் முதல் நாதம் ஈறாகவுள்ள தத்துவக் கூறுகள்.
4506.
கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது
கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது
புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று
பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று.
உரை:
இரக்கப் பண்பில்லாத என் மனமும் இளகியுருகும் இனிய பண்பைப் பெற்றுள்ளது என்பாள். “கரையா எனது மனக் கல்லும் கரைந்தது” என்று கூறுகின்றாள். புரையா நிலை - குற்றமுறாத நன்னிலை.
No comments:
Post a Comment