Thursday, June 19, 2014

AMBITION - உலகை வெல்லும் மந்திர வார்த்தைகள்

4. AMBITION
 இலட்சியம் / குறிக்கோள்








மனிதனாகப் பிறந்த யாருமே குறிக்கோள் [லட்சியம்] இல்லா விட்டால் வாழ்க்கையில் உயர்ந்த நிலை அடைவதோ, சிறந்த வாழ்க்கை வாழ்வதோ முடியாது. நம்முடைய குறிக்கோளை நாம் அறிந்தால் தான் வாழ்க்கையில் சரியான பாதையில் பயணத்தை மேற்கொள்ள முடியும். இலக்கு அல்லது இலட்சியமே இல்லாவிட்டால் வாழ்க்கையே கேள்விக்குறி தான். நாம் இந்த மண்ணில் பிறந்ததற்கான நோக்கத்தை அறிதல் வேண்டும். பின்பு அந்த இலக்கை நோக்கி நாம் நடைபோட வேண்டும். இலக்குகளற்ற பயணம் நம் வாழ்வின் நாட்களை வீணாக்கி விடும்.

ஒரு தேனீயை எடுத்துக் கொண்டால் கூட தேன் கூடு கட்டுவது அதன் இலட்சியமாக இருக்கிறது. அதற்காக பூக்களிலிருந்து தேனைச் சேகரிக்கிறது. எறும்பினை எடுத்துக் கொண்டால் கூட மழைக்காலத்தில் சாப்பிட உணவு சேகரிப்பதை இலட்சியமாகக் கொண்டிருக்கிறது. அதற்காக உணவு இருக்கும் இடங்களைக் கண்டறிந்து அதனைத் தனது புற்றில் சேமிக்கின்றது.
அது போல் நாம் ஒவ்வொருவரும் வாழ்வின் இலட்சியம் என்ன என்று அறிந்தால் தான் அது சார்ந்த அர்த்தமுள்ள விஷயங்களைச் செய்ய முடியும். பயணம் எங்கே என்று முடிவானால் தான் ரயிலிலா, பேருந்திலா, நடந்தா என்று முடிவு செய்ய முடியும். அதனால் முதலில் உங்களுடைய இலட்சியத்தை முடிவு செய்யுங்கள். அதன் பின் உங்களுடைய ஒட்டு மொத்தக் கவனத்தையும், ஒட்டு மொத்த நேரத்தையும், ஒட்டு மொத்த பயணத்தையும் அதை அடைவதில் செலவிடுங்கள். இதுவே மிக மிக முக்கியமான அடிப்படையான மந்திரச் சொல். இந்தச் சொல்லைத் தெரிந்திருந்திருந்தால் தான் பிற மந்திரச் சொற்கள் உங்களுக்கு அர்த்தம் கொடுப்பவையாக இருக்கும்.


No comments:

Post a Comment