Wednesday, June 25, 2014

5. 88 winning words - 5 appreciation

88 winning words 
5 - appreciation
 
வாழ்வில் அனைவருமே ஏங்கும் ஒரு விஷயம் இருக்கிறதென்றால் அது பாராட்டுக்கள் தான். தான் செய்த ஒரு விஷயத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டு முழுமனத்தோடு பாராட்டும் போது முழுமையான நிறைவு கிடைக்கிறது.

தன் சின்னச் சின்னக் கைகளால் பூக்கள் வரைந்து அப்பா, அம்மாவின் பாராட்டுக்காக நிற்கும் குழந்தை!

கணவனுக்குப் பிடித்த உணவு சமைத்து அதைப் பரிமாறி கணவனிடமிருந்து வரும் பாராட்டிற்காகக் காத்திருக்கும் மனைவி.

மனைவியின் பிறந்த நாளை ஞாபகம் வைத்துப் புடவை, நகை எடுத்துக் கொடுத்து, மனைவியிடமிருந்து பாராட்டுக்களை, முகமெங்கும் மகிழ்ச்சியை எதிர்பார்க்கும் கணவன்.

அலுவலகத்தில் கேட்டதற்கும் அதிகமாகவே வேலைகளைச் செய்து முடித்துப் பெரிய அதிகாரியின் பாராட்டிற்காகக் காத்திருக்கும் பணியாளர்.

ஆசிரியரின் பாராட்டை எதிர்பார்க்கும் மாணவன். தலைமையாசிரியரின் பாராட்டை எதிர்பார்க்கும் ஆசிரியர், கல்வியதிகாரியின் பாராட்டை எதிர்பார்க்கும் தலைமை ஆசிரியர் என்று பாராட்டை விரும்பாதவர், எதிர்பார்ப்பவர் யார் தான் உண்டு இங்கே.

ஏன் நாம் தூக்கிப்போடும் பந்தை ஓடிப்போய் எடுத்து வந்து நம்முடைய பாராட்டிற்காக காத்திருக்கும் ஜானியை, டாமியையும் அந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்தப் பாராட்டினால் நமக்குக் கிடைக்கும் லாபமோ எக்கச்சக்கம். பாராட்டாமல் போவதால் அடையும் நஷ்டங்களும் ஏராளம், ஏராளம். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் பிறரைப் பாராட்டுவதற்கு நமக்கு மனமிருந்தால் போதும், பணம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படி இருக்கும் போது, பிறரைப் பாராட்டினால் தான் என்ன? பாராட்டுங்கள்! அனைவரையும் பாராட்டுங்கள்! அவரவர் செய்த பணிகளைச் சீர்தூக்கி, நிறைகளை சுட்டிக்காட்டி மனமாரப் பாராட்டுங்கள்... அதற்குப் பிறகு பாருங்கள் உலகத்தின் உன்னதமான மனிதர், வெற்றிகரமான மனிதர் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.

 

No comments:

Post a Comment