Friday, June 27, 2014

கல்லூரிக் காலங்கள் - சிற்பம் கவிதை ஓவியம் - 3



கல்லூரிக் காலங்கள்
சிற்பம் கவிதை ஓவியம் - 3


காலை நேரம்!
அது ஒரு கவிதை,
செவ்வரி படர்ந்த
காதலியின்
கண்களைப் பார்ப்பதில்
இருக்கும் இன்பம்,
காலை நேரக்
கதிரவன் உதிப்பிலும்
உண்டு!

பறவைகள் இரைதேடிக் சுடுவிட்டு
வெளிச்செல்லும்!
மனிதன் தொழில்தேடி அலுவலகம்
பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை
என்று தன்
தற்காலிகக் கூடு செல்வான்!

"ஹேய் போயிடுவியாடா
இல்ல, நான்
வெய்ட் பண்ணட்டுமா"
அப்போதுதான் கனவுசுருட்டிக்
கதவுக்கு வந்தவன்,
"இல்லடா, மீட்டிங்
இருக்குன்னு சொன்னியே!
நீ கிளம்பு, நான்
பஸ்ல போயிக்கிறேன்!"

புல்லாங்குழலில்
நுழையும் வரைதான் காற்று
குழல்விட்டு
வெளிப்பட்டால்
அது இசையல்லவா?
வாகனங்கள் எழுப்பும்
ஓசைகூட இசைதான்
உற்றுக் கேட்டால்
உண்மை புரியும்!
அவனின் வாகனத்திலிருந்து
புகையோடு சை கலந்து
ஒரு கனவுக்காட்சி
உருவாகிடும் வேளையில்
"சரி போகும் போது
கண்ணாடி ஸ்டேண்டை
பார்த்துட்டுப் போ!"
"ம்............."
திரும்பினான்
கொஞ்சம் குழம்பினான்!
எதற்கு கண்ணாடி
பார்க்கச் சொன்னான்
முகத்தில் ஏதாவது.......
அருகில் சென்று கண்ணாடியில்
முகம் பார்த்தான்.
"ஒன்றுமில்லையே"!
திரும்புகையில் அது
கண்ணில்பட்டது!
பணம்..
காலேஜ்......பீஸ்
இன்னும் மணியார்டர்
வரவில்லையென
இரவு சொன்னது நினைவு வந்தது!
அது என்ன சில விஷயங்கள்
நேரடியாக
நெஞ்சைத் தாக்குகின்றதே!
அப்படித் தாக்குகையில்
கண்ணில் நீர்ப்பூக்கள்
பூக்கின்றதே!
நெகிழ்ந்தான்.......மனதில்
சொல்லிக் கொண்டான்
"யூ ஆர் கிரேட் சூர்யா"
அடுத்த அரைமணியில்
ஒரு கல்லூரி மாணவனாக
அறைவிட்டு
வெளிப்பட்டான்!
பத்து நிமிடத்தில்
எட்டிவிடக்கூடிய பஸ் நிறுத்தம் நோக்கி
எட்டுவைக்க ஆரம்பித்தான்!
வாகனங்கள் கடந்து,
வண்டுகளாய் விரையும்
மாணவ மாணவியப் பூக்கள் கடந்து,
கூட்டம் கடந்து, குழப்பம் கடந்து,
சலசலப்புகள் கடந்து
நிறுத்தம் வந்தான்..
கூட்டம் அதிகமில்லை!
மணிபார்த்தான்..
இவன் பயணிக்கும்
பஸ் வர
இன்னும் சிலநிமிடங்கள் இருந்தன!
அந்த நேரத்திலும்
அவனின் மனத்திலிருந்த
கவிஞன் யோசித்தான்!
மனிதனைப் பற்றி
ஒரு கவிஞன் யோசித்தான்!
"எதையோ தேடி
இவன் எப்போதும் அலைகிறானே
பரபரப்புடன், விறு விறுப்புடன்
கண்களில் தேடலோடு
இவன் அலைவது
காசுக்கா, கல்விக்கா
புகழுக்கா, அன்பிற்கா?
இந்த மனிதன்
பிறக்கும் போதே
எதையோ
தொலைத்து விட்டுத்தான்
பிறக்கிறான்!
அதனால்தான் தன்
வாழ்வு முழுதும்
தேடுவது என்னவென்று
தெரியாமலே
தேடிக்கொண்டே இருக்கிறான்
தேடி ஓடிக் கொண்டே இருக்கிறான்"
கலகலவென்ற சிரிப்பொலியால்
அவனின் கவிதைச் சிந்தனை
தடைப்பட்டது!
சைக்கிளில் மாணவியர்
கூட்டம்..
உலாவரும் ஒளிக் கதிர்களா?
வயதிற்கே உரிய குறும்போடு
ஆர்ப்பரிக்கும் அலைபோல
ஆரவாரத்தோடு
அருவிவிழும் சத்தம்போல
சிலிர்க்கும் ஓசையோடு........
பேச்சு, சிரிப்பு..............
ஒரு எதிர்பாராத நொடியில்
அந்தப் பெண்
அவனை நோக்கித் திரும்பினாள்!
விழிகள் கலந்தன!
பிரமித்தான்..............
இது.....இது.......அவளல்லவா
பூக்கொடுத்த புன்னகை நிலா!
அந்தக் கூட்டம் மெல்ல
அவனைக் கடந்தது!
"யேய், கவிஞர் நிக்கறார்டி,
கவனிக்கலையா?"
"அது எப்படிக் கவனிக்காம விடுவா?
அப்டியே திரும்பி கண்ணாலேயே
ஒரு டச்சிங் குடுத்தா பாரு"
"கண்ணும் கண்ணும்
கொள்ளையடித்தால்"
"யேய், சும்மா வாங்கடி!
"இங்க பாருடி, வெக்கமா?"
"நல்ல வேளை! இன்னைக்கு
மல்லிகைப்பூ.. ரோஜாவா
இருந்துச்சு இன்னைக்கும்
கொடுத்திருப்பா"
"ரோஜா வாங்கின ராஜா
இருக்கார், ரோஜா எங்கடி?"
"ஏய் சும்மா வரப் போறீங்களா
இல்லையா?"
கவலையில்லாத சிரிப்புக்களோடு
அந்தக்கூட்டம் அவனைக்
கடந்து மறைந்தது!
கண் மறையும் வரை
பார்த்துக் கொண்டே நின்றான்!
யார் இந்த தேவதை!
என் வாழ்க்கை வழியில்
திடீரென்று புது வசந்தமா?
சரளைக்கற்களின்
சத்தத்தில் நடக்கும் எனக்கு
மலர் விரிப்பால் புது அழைப்பா?
இங்கேதான் இருக்கிறாளா?
இத்தனை நாள்
எப்படி நான் கவனிக்காமல்
இருந்தேன்!
இனிமேல் கல்லூரிக்கு தினமும்
பஸ்ஸிலேயே சென்று விடலாமா?
ஆம்.......அவளின் பெயர்
என்னவாக இருக்கும்?
யோசனைக்கு முற்றுப்புள்ளியாக
தூரத்தில் புழுதிப்புயலோடு
பேருந்து வந்து கொண்டிருந்தது!

ஓவியம் தொடரும்...

No comments:

Post a Comment