Wednesday, June 25, 2014

LEARN ENGLISH



LEARN ENGLISH

உங்களிடம் ஒரு வார்த்தை!

ஆங்கிலம் ஒரு வர்த்தக மொழியாக உலகின் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது. ஆங்கிலம் மட்டும் தெளிவாக, சரளமாகப் பேசவும் எழுதவும் தெரிந்திருந்தாலே போதும் லட்சங்களில் சம்பாதிக்கலாம். இன்று மற்ற பல துறைகளில் மிகுந்த திறமைசாலிகளாக விளங்கும் பலரும் தடுமாறும் ஓர் இடம் ஆங்கிலம் பேசுவது. ஆங்கிலத்தில் சரளமாக எழுத, பேச தெரியாத காரணத்தினால் தங்களுடைய திறமைக்கேற்ற ஊதியத்தைப் பெறாமல் 10,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை குறைவாகச் சம்பளம் பெறுவோர் இருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் பல்கிப் பெருகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் அந்த நிறுவனங்களைப் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடுவதோடு பலரின் கனவு முடிந்து போய்விடுகிறது. நேர்காணலில் தேர்ச்சியடைந்து அந்நிறுவனங்களின் உள்ளே சென்று வேலை செய்து லட்சக்கணக்கில் சம்பளம் பெறுவது அவ்வளவு கடினமான செயலா என்றால்.... இல்லை என்றே நான் சொல்வேன். அதற்குத் தேவை, மனத்தில் ஓர் இலட்சியமும் வைராக்கியமும், இடைவிடாத முயற்சியும் பயிற்சியும் மட்டுமே.

 

சில சமயங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கூட ஆங்கிலத்தில் பேசத்தடுமாறுவதை நாம் காண்கிறோம். இதில் அரசு அலுவலர்கள், தனியார் அலுவலர்கள், அதிகாரிகள், முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என்ற பேதமில்லாமல் அனைவருமே இருக்கிறார்கள். முக்கிய விஷயம் என்னவென்றால், ஆங்கிலம் தெரியாமலிருப்பதில் தவறே இல்லை. ஏனென்றால் ஆங்கிலம் நமது தாய்மொழி இல்லையே. தமிழ்நாட்டில் தமிழில் பேசத்தெரியாமல் இருந்தால்தான் நாம் வருத்தப்பட வேண்டும். ஆங்கிலத்தில் பேசத்தெரியாமல் இருப்பது ஏதோ ஒரு குறைபாடு என்பது போலவும் அது மிகப்பெரிய குற்றம் என்பது போலவும் மனதில் ஒரு குற்ற உணர்ச்சியோடுதான் இங்கே பலர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இன்றைய விஞ்ஞான சூழ்நிலையில் நமக்கு எது தெரிந்திருக்கிறதோ இல்லையோ கணிணி அறிவும் ஆங்கில அறிவும் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது. கணிணி மட்டும் தெரிந்திருந்தாலே ஒரு குறிப்பிடத்தக்க சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதே போல் ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரிந்தவர்களுக்கு, ஆங்கிலத்தில் நல்ல புலமை உடையவர்களுக்கு 15,000 முதல் 20,000 வரை ஆரம்பத்திலேயே சம்பளம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் வேறு எந்த அறிவை வளர்த்துக் கொள்கிறோமோ இல்லையோ, வெறும் ஆங்கில அறிவை, ஆங்கிலம் பேசும் திறமையை வளர்த்துக் கொண்டாலே நம் வாழ்வு வளமுடையதாக ஆகிவிடும்.

பெரிய பெரிய நிறுவனங்கள் கூட வேலைக்கு வல்லுநர்களை நியமிக்கும் போது முதலில் 'தொடர்பு கொள்ளும் திறமை' Communication Skill எப்படி இருக்கிறது என்றுதான் பார்க்கிறார்கள். அதன் பின்பே அவர்களின் 'வேலை சார்ந்த திறமை' Technical Skill எப்படி இருக்கிறது என்று பார்க்கிறார்கள். அதனால் ஆங்கிலம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனால் பலருக்கும் வேப்பங்காயாய் கசப்பது ஆங்கிலம் பேசுவது என்பது தான். ஒருவர் நன்றாக ஆங்கிலம் பேசினாலே அவரைப்பார்த்து மற்றவர்களுக்கு இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் வந்து விடுகிறது. அவரை விடத் திறமைசாலியாய் இருந்தும் தமது கருத்துக்களை சரளமாக வெளியிட முடியாமையால் கூனிக்குறுகிப் போகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒன்று புரிவதில்லை, கற்றுக் கொள்ளும் வரை தான் ஆங்கிலம் கடிவாளம் இல்லாத குதிரை, கற்றுக்கொண்டுவிட்டால் நம்மை சுகமாய் அழைத்துச் செல்லும் தேர் அது. 
பஸ்ஸில் பயணிக்கிறீர்கள், அல்லது தியேட்டருக்குச் செல்கிறீர்கள், கவனித்துப்பாருங்கள் எவ்வளவு பேர் சரளமாய் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் என்று. என்ன அவர்களெல்லாம் ஆங்கிலேயர்களா? இல்லையே தமிழர்கள் தானே. அதுவும் அவர்கள் பேசும் தோரணையும், ஸ்டைலையும் பார்த்தால் ஆங்கிலேயர்களை விஞ்சி விடுவார்கள் போலிருக்கிறதே. நமக்கு அவர்களைப் பார்த்தாலே பிடிக்கவில்லை. எரிந்து விழுகிறோம். 'என்னமோ பெரிய, ஃபாரின்ல பிறந்த மாதிரி தான்' என்று மனதிற்குள் திட்டுகிறோம். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஏனென்றால் இன்று சர்வதேச அளவில் ஆங்கிலம் தொடர்பு மொழியாய் இருக்கிறது.

அதோடு வேறோரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதாவது நீங்கள் புதிதாக சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ளுகிறீர்கள், சரி வேண்டாம் - கார் ஓட்டக் கற்றுக்கொள்கிறீர்கள் அல்லது நீச்சல் கற்றுக்கொள்கிறீர்கள் அல்லது எதுவோ கற்றுக்கொள்கிறீர்கள். என்ன செய்வீர்கள்?, எங்கே யாரைப்பார்த்தாலும் அதைப்பற்றித் தான் பேசுவீர்கள் இல்லையா?, அதிலேயே மூழ்கிக்கிடக்க ஆசைப்படுவீர்கள் இல்லையா?. அதுபோல் தான் ஆங்கிலமும், கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டால் அதனை எங்கேயாவது யாரிடமாவது பயன்படுத்த ஆசைப்படுவோம், ஆங்கிலத்திலேயே பேச முயலுவோம்.

நீங்கள் ஒரு தீவில் இருக்கிறீர்கள்

சிலர் ஆங்கிலத்தில் எப்படி திடீரெனப் பேசுவது என்று வெட்கப்படுவார்கள். அது நியாயமானது தான். ஆங்கிலம் பேசும் சுற்றுப்புறம் இல்லையென்றால் நாம் பேசிப் பழகுவதும், கூச்சமின்றிப் பேசுவதும் கொஞ்சம் சிரமமான விஷயம் தான். ஆனால் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு விபத்தில் நீங்கள் ஏதோ ஒரு தீவிற்குச் சென்று விட்டீர்கள். அங்கே அவர்களுக்குத் தமிழே தெரியாது. உங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் தான் நீங்கள் அவர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். உங்களைத் தவிர எல்லோரும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகிறார்கள். இப்போது என்ன செய்வீர்கள். ரொம்ப சுலபமாய் நீங்களும் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து விடுவீர்கள். முதலில் கொஞ்சம் சிரமமாய் இருந்தால் கூட, ஒரு வாரத்திலேயே நீங்கள் சரளமாய் ஆங்கிலத்தில் பேசுவது கண்டு உங்களுக்கே வியப்பாய் இருக்கும். இப்போது நீங்கள் கூச்சப்படவில்லை, வெட்கப்படவில்லை, பேச வேண்டுமென்ற முனைப்பும், ஆர்வமும் அளவிற்கதிகமாய் இருக்கிறது. அவர்கள் எப்படியெல்லாம் பேசுகிறார்களோ, அதையெல்லாம் புதிது புதிதாகக் கற்றுக்கொண்டு அவர்களிடம் திறமையாக மறுமொழி பேசி, பாராட்டுப் பெற முயல்கிறீர்கள்.

முதல் உறுதிமொழி!

அதனால் உங்களுக்கிருக்கும் முதல் தடை எது என்று இப்போது கண்டறிந்து விட்டீர்களா? ஆம்! சுற்றுப்புறம்! ஆங்கிலம் பேச, அல்லது வேறு எந்த மொழியையும் பேச அம்மொழியைப் பேசும் சூழ்நிலை அவசியம். அதனால் உங்கள் முதல் தேடல் ஆங்கிலத்திலேயே சரளமாகப் பேசும் ஒருவருடனோ, ஒரு குழுவிடனோ நட்பை ஏற்படுத்திக் கொள்வது. அவர்களிடம் மறந்தும் பிற மொழியில் பேசாமல், தப்பும் தவறுமாக இருந்தாலும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவது. இந்த உறுதிமொழியை நீங்கள் எனக்குக் கொடுப்பதாக இருந்தால், ஒரே மாதத்தில் உங்களை ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவைக்க முடியும் என்ற தெளிவான உறுதிமொழியை நான் உங்களுக்கு வழங்குகிறேன்.

No comments:

Post a Comment