Monday, July 21, 2014

கல்லூரிக் காலங்கள் – கவிதைத் தொடர் சிற்பம்.. கவிதை.. ஓவியம் – 10



கல்லூரிக் காலங்கள் – கவிதைத் தொடர்
சிற்பம்.. கவிதை.. ஓவியம் – 10





கல்லூரி...
மனதில் ஆயிரம் கனவுகளோடு
பதட்டத்தோடு சிறிது
பயத்தோடு அவன்...
இது ஒரு
இனிதான அவஸ்தை!
அவளை உடனே
காண வேண்டுமென்று
கண்கள் துடித்தன!
அவன் வகுப்பை நெருங்கினான்!
இப்போது சொல்லலாமா?
மாலை சொல்லலாமா?
இப்போது வேண்டாம் அப்புறம்
கிளாஸ் அட்டெண்ட் பண்ண முடியாது!
மாலையே சொல்லிக் கொள்ளலாம்!
மனதிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே
நடந்தான்!
தூரத்தில் மரத்தடியில்
அவளின் தோழிகள்!
தண்ணீர் தேடும் பறவையாக
அவனின் கண்கள்
அங்கே அவளைத்தேடின!
இல்லை... அந்தக் கூட்டத்தில்
அவள் இல்லை!
இன்னும் வரவில்லையா?
எல்லோரும் சேர்ந்துதானே
வருவார்கள்?...
இன்று ஏதாவது
தாமதமாயிருக்கும்!
இப்போது பார்க்காததும்
நல்லது தான்
இல்லையென்றால்
இருவருக்குமே
சங்கடம் தான்!
வகுப்பை நோக்கிச் சற்று
ஆறுதலடைந்த மனத்துடன்
நடக்க ஆரம்பித்தான்.

"கிளியோபாட்ரா இறந்ததைக்
கேட்டவுடன் ஆண்ட்டனி அப்படியே
துடித்துவிட்டான்!
தன் மனைவியை இழந்தபோது
இராஜ்ஜியத்தை இழந்தபோது
போரில் தோல்வியுற்ற போது
கலங்காத ஆண்ட்டனி
இப்போது கலங்கினான்!
தன் வேலையாளை அருகே
அழைத்தான்!
"நீ ஒரு உண்மையான ஊழியனா?"
"ஆம்....அரசே!"
"நான் சொல்வதெல்லாம்
நிறைவேற்றுவாயல்லவா?"
"நிச்சயமாய் அரசே!"
"அப்படியானல் இதோ வாள்
என்னைக் கொன்றுவிடு!"
அதிர்ச்சியில் அந்த வேலையாள்
உறைந்துவிட்டான்!
தலைவனைக் கொல்ல
விரும்பாத அந்த வேலையாள்
தன்னைத்தானே
குத்திக்கொண்டு
உயிரைப் போக்கிக்கொண்டான்
தன் வேலையாளின் உண்மையான
நன்றியை
உணர்ந்த ஆண்ட்டனி
ஒரே ஒரு வார்த்தைதான்
கூறினான்!
"நன்றி நண்பனே
இறக்கும் வழி எதுவென்று
எனக்குக் காட்டிவிட்டாய்"
தன்வாளை மேலே தூக்கி எறிந்து
மார்பைக் காட்டி நின்றான்!
கொலை வாளுக்குக் கூடத் தலைவனை
கொல்லும் தைரியமில்லை
மேலே சென்ற வாள்
மார்பில் வந்து பதிந்தது!
ஆனால் பாதிதான் உட்சென்றது!
தடுமாறிக் கீழே விழுந்த
ஆண்ட்டனியின் உயிர்
கொஞ்சம் கொஞ்சமாகச் சென்று
கொண்டிருந்தது.
அப்போதுதான் ஒரு வேலையாள்
உள்ளே வந்தான்.
"மதிப்பிற்குரிய ஆண்டனி
கிளியோபாட்ரா இறக்கவில்லை
தங்களைக் காண வந்து
கொண்டிருக்கிறார்!"
கிளியோபாட்ரா தான் இறந்துவிட்டதாக
முன்பு அனுப்பிய பொய்த்தகவல்
ஆண்ட்டனிக்கு எமனாய் அமைந்தது!
ஆனாலும் அவன் கோபப்படவில்லை!
வீரர்களிடம் வேண்டினான்
"என் காதலியிடம் என்னை
எடுத்துச் சொல்லுங்கள்
அவள் மடியில்தான் என்
உயிர் பிரிய வேண்டும்"....

"பல பேர் சொல்லுவாங்க!
ஆண்டெனி-கிளியோபாட்ராக்கு
இடையில் இருந்தது
காதல் இல்லை காமம்னு!
ஆனா ஒரு உண்மையான
காதலனால தான்
காதலிக்காகத் தன்
உயிரையே தரமுடியும்"
பேராசிரியர் உரையை முடித்தபோது
அவனின் இதயத்தை
யாரோ அறுத்தது போல் இருந்தது!
அவளின் நினைவு அடிக்கடி
வந்தது!
உடனே பார்க்க வேண்டும்
போலிருந்தது!
..........

மாலைநேரம்
கல்லூரி விட்டு மாணவ, மாணவியர்
கூட்டம் மெல்ல மெல்லக்
கலைந்து கொண்டிருந்தது!
நடப்போரும்
சைக்கிளில் செல்வோரும்
பஸ்ஸூக்குக் காத்திருப்போருமாக
கூட்டம் மெல்லக்
குறைந்து கொண்டே இருந்தது!
வழக்கமாகச்
சந்தித்துப் பேசும் மரத்தடியில் அவன்!
குளத்தில் கல்வீசும்
காதலன் போல்
ஒவ்வொரு புல்லாகப்
பிடுங்கிப் போட்டுக் கொண்டிருந்தான்..
மஞ்சள், மலர்கள்
விரவிக் கிடந்தன!
மனம் மட்டும் உடலைவிட்டுக்
கொஞ்சம்
விலகிக்கிடந்தது!
..............
அவனுள்
பலவித யோசனைகள்
துளிர்விட ஆரம்பித்தான்!
கல்லூரிக்கு இன்று அவள்
வரவேயில்லையா?
இல்லாவிட்டால் கல்லூரி முடிந்ததும்
உடனே வந்துவிடுவாளே!
இல்லை என்மேல் கோபமா?
ச்சே! நேற்று நான் அப்படி
நடந்து கொண்டிருக்கக் கூடாது!
ஏன் அப்படிப் பண்ணினோம்!
அப்போதுதான் அவன்
கவனித்தான்.
அவளின் தோழிகள்
மெல்லக் கல்லூரிவிட்டுச்
சென்று கொண்டிருந்தனர்!
அவனின் இதயத்தில்
வேதனைவலி!
தலையைக்குனிந்து கொண்டு
அப்படியே இருந்தான்!
ஏன் வரவில்லை
ஏன் வரவில்லை?
ஏதாவது பிரச்சனையா?
உள்ளத்தில் ஆயிரம் கேள்விகள்
அப்படியே அமர்ந்திருந்தான்!
எவ்வளவு நேரம்
ஆனதோ தெரியவில்லை.
........

மெதுவாக இருட்ட ஆரம்பித்தது!
........

கல்லூரி வாசலில்
வண்டிச்சத்தம்
நண்பனுடையது!
உணர்வுக்கு வந்து
விரைவாக எழுந்து
வாசல் நோக்கி நடக்க
ஆரம்பித்தான்!
வாட்ச்மேனுடன் அவன்
பேசிக்கொண்டிருக்கும் சத்தம்...
"சூரியா கொஞ்சம்
லேட்டாயிருச்சு...."
நண்பணின் தோற்றத்தைப்
பார்த்தவன்
பதறிப்போனான்!
ஏதோ நடந்திருக்கிறது!
ஒரு வேலை அவள்
மறுத்துவிட்டாளோ?
அதனால்தான் இவன்
மனமுடைந்து......
கடவுளே!
அப்படி எதுவும் ஆகியிருக்கக்
கூடாது!
என்னாச்சுடா!
வாய்வரை வந்துவிட்ட கேள்வி!
அவனின் தொய்ந்த முகத்தைப்
பார்த்து அப்படியே அடங்கிவிட்டது!
"வா வீட்ல போய்
பேசிக்கலாம்"
இருவரின் மனத்திலும்
உணர்ச்சிப் போராட்டம்.
வீடு செல்லும் வரை பேசிக்
கொள்ளவே இல்லை!
வீட்டில் நுழைந்தவுடன்
இருவர் இடையிலும் ஒரு
கனத்த மௌனம் நிலவியது!
அவனால் நண்பனின்
மௌனத்தை பொறுத்துக்
கொள்ளவே முடியவில்லை!
உணர்ச்சிப் பிழம்பாக வெடித்தான்!
"என்ன தான்டா நடந்துச்சு!
ஏன் இப்படி இருக்க?
அவ ஏதாவது சொன்னாளா?
........
உனக்கு ஒன்னுன்னா என்னால
தாங்கிக்க முடியாதுடா!"
மெல்ல அவன் நிமிர்ந்தான்
"சொல்லு சொல்லு
என்ன ஆச்சு?"
"அவ இன்னைக்கு
காலேஜீக்கே வரலைடா"

No comments:

Post a Comment