கல்லூரிக் காலங்கள் – கவிதைத் தொடர்
சிற்பம்.. கவிதை.. ஓவியம் –7
புத்தகங்கள்
மனிதனின் சிறந்த
நண்பர்கள்!
வாழ்க்கையைப்
புனிதப்படுத்துபவை!
காதலும் சரி
காவியங்களும் சரி
போரும் சரி
புரட்சிகளும் சரி
இவற்றிற்குப்
புத்தகங்களே மூலகாரணமாய்
அமைந்திருந்தன!
அவை
அனுபவங்களின் தொகுப்பு
வாழ்க்கை நெறிகளின்
வகுப்பு!
அவன் சோகமாக இருந்தாலும்
சந்தோஷமாக இருந்தாலும்
புத்தகங்களிலே
தான் தன்னைப்
புதைத்துக் கொள்வான்..
படிக்கும் அறையில்
பலரின்
நடுவில் ஏதோ ஒரு
நாவலின்
இடையில் அவன்!
"ஹலோ குட்
ஈவினிங்"
அங்கே அவள்
நிலவின் தங்கையாக
"ஹலோ வாங்க.......வாங்க"
அவனின் குரலில்
தொனித்த வேகம்....
பல தலைகள் நிமிர்ந்தன
"வாங்களேன்
பேசிட்டே போய்
ஒரு காபி சாப்பிட்டு
வரலாம்"
"ஓ! யெஸ்
பட் நான் தான்
பே....பண்ணுவேன்"
சிரித்தாள்..
"ஓ.கே...ஓ.கே...
கம்...லெட்ஸ்..கோ"
கல்லூரி கேண்டீன்
நோக்கி
அவர்களின் பாதங்கள்
பயணித்தன!
"நீங்க கொடுத்த
கவிதைப் புத்தகம்
அது என்ன...ம்...கண்ணீர்ப்பூக்கள்..
ரொம்ப நல்லா இருந்தது!"
"படிச்சிட்டீங்களா...........அன்னைக்கு
பார்க்கலாம்னு
சொல்லிட்டு
உங்க பெயர், மேஜர்
எதுவுமே சொல்லாம
எங்க எப்ப பார்க்கிறதுன்னு
சொல்லாமலே போயிட்டீங்களே
நான் ரொம்ப குழம்பிட்டேன்"
"ஸாரி......ஆமா
ஞாயிற்றுக்கிழமை
நீங்களும் உங்க
ஃபிரண்டும்
எங்க போனீங்க?"
"அதுவா! சர்ச்சுக்குத்தான்
போனோம்
ஆமாம் என்னோட ஃபிரண்டை
உங்களுக்குத் தெரியுமா?"
"ம்....ரெண்டு
மூணு தடவை
உங்க ரெண்டு பேரையும்
பார்த்திருக்கேன்
ஆமா...நீங்க கிறிஸ்டியன்
உங்க ஃபிரண்டு?"
"ம்... அவன்
ஹிந்து தான்
ஆனா நாங்க அப்படி
ஒருநாளும்
பழகினதே இல்ல!
ப்ரைடே.... அவன்கூடச்
சேர்ந்து
நான் கோவிலுக்குப்
போவேன்
சன்டே...........என்கூடச்
சேர்ந்து
அவன் சர்ச்சுக்கு
வருவான்
என்னையவிட பைபிள்
அவனுக்கு
நல்லாவே தெரியும்!"
"காலேஜ் படிக்கறப்போ
இந்த மாதிரி
நல்ல பிரண்ட் அமையறது......
இட்ஸ் சம்திங்
கிரேட் இல்ல."
"ஏன் அனு
உங்க ஃபிரண்ட்செல்லாம்.."
அவனை நிமிர்ந்து
பார்த்தாள்..
தான் எப்படி அவள்
பெயரை
உச்சரித்தோம் என்றே
அவனுக்கே
தெரியவில்லை.
"ஐம் ஸாரி
திடீர்னு அப்படி..."
கலகலவெனச் சிரித்தாள்.
"நீங்க என்னைப்
பேர் சொல்லிக்
கூப்பிட்டது எவ்ளோ
சந்தோஷமா
இருந்தது தெரியுமா?..
நீங்க என்னடான்னா..."
"அப்பாடா
இப்பத்தான் நிம்மதியாச்சு
"அனு"
தானே உங்க நேம்
அன்னைக்கு உங்க
பிரண்ட்ஸ் எல்லாம்
கூப்பிட்டப்ப கேட்டேன்!"
"அனுசூயா.....ஃபுல்நேம்
ஆனா அனுன்னுதான்
எல்லாரும்
கூப்பிடுவாங்க!"
"ஸ்வீட் நேம்....என்னமோ
பேசிட்டிருந்தோம்
திடீர்னு இதுக்கு
வந்திட்டோம் இல்ல!"
"ஆமா! என்னோட
பிரண்ட்ஸ் பத்திக்
கேட்டீங்க!
"யெஸ்! யெஸ்!
அவங்களுக்கென்ன
நல்லாத்தானே பழகுறாங்க!"
"இருக்கலாம்....ஆனா
தோழியா
பழகறதுக்கு என்னோட
கஷ்ட
நஷ்டத்தையெல்லாம்
ஷேர் பண்ணிக்கற
அளவுக்கு யாருமேயில்லயே!"
"ஓ ஐயம் சாரி
எதையோ கிளறிட்டேன்
இல்ல!"
"நோ...நோ...அப்படில்லாம்
ஒண்ணுமில்ல!
ஆமா உங்க கவிதைகள்
எல்லாம் கொண்டு
வருவீங்களா?
ஒருநாள் படிச்சிட்டுத்
தர்றேன்"
"ஷ்யூர்..நாளைக்கே
கொண்டு
வர்றேன்..ஆனா ஒரு
கண்டிஷன்"
"என்ன?"
"படிச்சுட்டு
அதுக்கு நீங்க
காமெண்ட்ஸ் எழுதணும்
ஓ.கே.யா?"
"ம்...ஆனா
காமெண்ட்
பண்ற அளவுக்கு
நான் என்ன
பெரிய ஆளா?"
"எனக்குப்
பெரிய ஆளோட கருத்துத்
தேவையில்லை அனு!
உங்களப்போல
ஒரு காலேஜ் படிக்கிற
பொண்ணோட
உண்மையான காமெண்ட்தான்
தேவை
ரியலி ஐ நீட் இட்"
"ம்...மறந்துட்டேன்...காலையிலே
கோயிலுக்குப் போயிருந்தேன்
இந்தாங்க திருநீர்
எடுத்துக்குங்க"
காகிதத்தில் இருந்த
திருநீர்
இப்போது அவனின்
நெற்றியில்!
"அட! நான்
மறந்தே போயிட்டேன்
நீங்க திருநீர்
எல்லாம்
வைப்பீங்களா?.."
"நான்தான்
சொல்றனே.......
நான் கடவுள்கிட்ட
எல்லாம்
பார்ஷியாலிட்டி
பார்க்கிறதில்லை!"
சிரித்தாள்.....
"இதற்கும்
சிரிப்புத்தானா?
இன்னொன்னு சொன்னா
கோவிச்சுக்க மாட்டீங்களே!"
"சொல்லுங்க?"
கண்கள் மலரக் கேட்டாள்
"சிரிக்கும்போது
நீங்க ரொம்ப
அழகா இருக்கீங்க!"
கலகலவெனப் சிரித்தாள்!
கேண்டீன்...
"ரெண்டு காபி"
அவளிடம்
"வாங்க அப்படி
உட்காரலாம்"
என்றான்..
அமர்ந்தாள்.
"ஐயோ போச்சு"
உட்காரப் போனவன்
பதறியபடி கேட்டான்
"ஏன் என்னாச்சு?"
"என்னோட பிரண்ட்ஸ்
வர்றாங்க"
"அது தானா!
ஏன் பயப்படறீங்களா?"
"பயம் இல்ல!
ஏற்கனவே எப்பப்பார்த்தாலும்
கேலி பண்ணிட்டே
இருப்பாங்க.
இன்னைக்கு உங்களையும்
என்னையும் ஒருசேர
கேண்டீன்ல
பார்த்துட்டாங்கன்னா
அவ்ளோதான்
இன்னும் ஒரு வாரத்திற்கு
வேற மேட்டரே தேவையில்லை"
அந்தக்கும்பல்
ஒரே
ஆரவாரத்துடன் நுழைந்தது!
"அங்கே பாருங்கடி"
அவ்வளவுதான்
அங்கே அடுத்து
வந்த நிமிடங்களில்
அவர்களைப்பற்றிய
பேச்சுத் தொடங்கியது
காது கடித்தல்,
சிரித்தல், தொடர்ந்தது
அவள் தலையைக் குனிந்து
கொண்டாள்..
அவன் சிரித்தபடியே
கேட்டான்
"ஏன் அமைதியாயிட்டீங்க?
அனு..உங்களத்தான்..
ஸாரி தர்மசங்கடத்தில
மாட்டிவிட்டுட்டேனா"
"ஐயோ அப்படியெல்லாம்
ஒன்னுமில்ல! இன்னும்
கொஞ்ச
நேரம் உங்ககூடப்
பேசிட்டிருக்கலாமேன்னு
பார்த்தேன்...அதுக்குள்ள"
சிரித்தான்...
"இட்ஸ் ஓக்கே
நீங்க உங்க ஃபிரண்ட்ஸ்ஸோட
ஜாயிண்ட் பண்ணிக்குங்க"
"ம்...சரி....நாளைக்கு
உங்க
கவிதைகளை கொண்டுவர
மறந்துடாதீங்க"
"ம்..கண்டிப்பா
கொண்டுவர்றேன்
சீ..யூ.."
கிளம்பிச்சென்றான்
அவன் கடக்கும்போது
அந்தக்
கும்பலின் சிரிப்பு
சத்தம்
பலமாய்க் கேட்டது!
"ஏய் அனு
கவிஞரை வளைச்சிட்டே
போலிருக்கே!"
"ச்சீ அப்படில்லாம்
பேசாதடி
அருண் அப்படிப்பட்ட
ஆள் இல்ல!"
"ஏய் என்னடி
ரெண்டுநாள்
பேசுனதிலேயே அவனப்பத்தி
முழுசா புரிஞ்சுக்கிட்டீங்களோ"
ஏய்..மரியாதை இல்லாம
அவன்..இவன்...னு
பேசாத"
"என்ன அம்மாவுக்குக்
கோபம்
பொத்துகிட்டு வருதாக்கும்!
ஆம்பளைங்க எல்லாம்
பொண்ணுங்கன்னா
ஆ ன்னு வாயப்பிளந்திட்டு
ஜொள்ளு விடறவங்கதான்டி
இதில அவன் மட்டும்
ரொம்ப
யோக்யமா.......பெரிசா
பேச வந்திட்டா!"
கோபத்தில அவள்
முகம் சிவந்தது
"ஏய்..யூ...இன்னும்
ஒரு வார்த்தை
அவரைப்பத்தி தப்பா
பேசினே.."
"பேசினா என்னடி
செய்வ?
ஒரு தடவை இல்ல
ஆயிரம் தடவை
சொல்லுவேன், ஆம்பளைங்க
எல்லாமே
பொம்பளப் பொறுக்கிங்கதான்
இதுல அவனும் ஒருத்தன்.."
பளார்..ஒரு யுத்த
மின்னல்
அங்கே வெடித்தது.
ஒரு தர்மசங்கடமான
சூழ்நிலை..
மற்ற எல்லாப் பெண்களுமே
நடத்துமுடிந்து
விட்ட சம்பவத்தால்
விக்கித்துப் போய்
நின்றனர்..
அடிவாங்கிய பெண்
அழுது
கொண்டிருந்தாள்..
இவள் நெருங்கினாள்
"கலா..கலா...ஏய்
வெரிவெரி ஸாரிடி.."
தலையைக் கோதினாள்.
அவள் இவளை
அப்படியே அணைத்துக்
கொண்டு
தேம்ப ஆரம்பித்தாள்
"அனு அவ சொல்றதிலேயும்
அர்த்தம் இருக்குடி!
ஏன்னா அவ ஏற்கனெவே
ஒருத்தன நம்பி
ஏமாந்து போனவ.
தன்னோட பிரண்ட்ஸூம்
அப்படி
ஆயிடக்கூடாதேன்னு
தான் அப்படி பேசிட்டா"
"ரஸி...நான்
இப்பவும் சொல்றேன்
நானோ அருனோ எந்தவிதமான
தப்பான எண்ணத்தோடவும்
பழகல! அதனாலத்தான்
அருணைப்
பத்தி சொன்னவுடனே
அவ்வளவு
எமோஷனல் ஆயிட்டேன்.
அவ்வளவு ஏன் உங்களுக்கே
தெரியாதா?
இந்த ரெண்டு வருஷத்திலே
அருண்
நம்ப காலேஜ்ல ஒரு
பொண்ணயாச்சும்
ஏறெடுத்துப் பார்த்திருப்பாரா
இல்ல பேசியிருப்பாரா!
இப்பக்கூட நானாப்
போயிப்
பேசியிருக்காட்டி
அவர் அப்படியேதான்
இருந்திருப்பார்."
அந்த நட்சத்திரம்
நிலவை நெருங்கியது
"அனு ஆரம்பத்துல
அப்படித்தான்
இருக்கும் ஆனா..
போகப்போக
எல்லா ஆண்களுமே
ஒரே
மாதிரிதான்னு நீ
புரிஞ்சுக்குவ!"
"நோ.. என்னோட
அருண் அப்படி இல்ல"
"என்னோட அருண்"
தன் வாயிலிருந்தா
அந்த வார்த்தைகள்
வந்தன?
அவளுக்கே ஆச்சர்யமாய்
இருந்தது!
"ரஸி இப்ப
நான் சொல்றேன்
மீதி இருக்கப்போற
இந்த
ஒரு வருஷத்திலே
நான்
அருணோட டீப்பாகப்
பழகப் போறேன்!
நட்பு காதலா மாறலாம்
அது தப்பே இல்ல!
ஆனா நான் நட்புத்தான்னு
நெனச்சுப் பழகறதுனால
"காதலுக்கு"
சான்சே இல்ல
அருணும் அப்படித்தான்
அவரோட நிலைல இருந்து
என்னைக்குமே மாறமாட்டார்
அப்படி அவர் மாறி
என்னப்
பார்த்து ஐ..லவ்..யூ..
சொல்லிட்டா நான்
என்னோட
தோல்வியை ஒப்புக்கிறேன்.
அருணும் ஒரு ஆர்டினரி
ஆண்
அப்படின்னு ஏத்துக்கிறேன்
இட்டிஸ் ய சேலஞ்ச்
இது எனக்கு ஒரு
அக்னிப் பரிட்சை"
No comments:
Post a Comment