Thursday, July 17, 2014

கல்லூரிக் காலங்கள் – கவிதைத் தொடர் சிற்பம்.. கவிதை.. ஓவியம் – 9




கல்லூரிக் காலங்கள் – கவிதைத் தொடர்
சிற்பம்.. கவிதை.. ஓவியம் – 9







காதல் மட்டும் இந்த
இளைஞர்களைத்
தொட்டு விட்டால்...அடடா
வானவில் வாசலாகும்
காற்றே உணவாகும்!
ஆனால்
நிஜம் மட்டும் நிழலாகும்!
..........
அவனால் வகுப்பில்
அமர்ந்திருக்கவே முடியவில்லை!
கடவுளின் தரிசனத்தைக் காணப்
போகும் யோகி போல
மாலைநேரம் எதிர்பார்த்துத்
தவமிருக்க ஆரம்பித்தான்!
"சார்லஸ் லேம்ப்...
எப்படிப்பட்ட எழுத்தாளர்
தெரியுமா?
எவ்வளவு எளிதான நடை
ஆனால் ஆழமான கருத்துகள்..
லேம்பின் கட்டுரைகளே
கவிதைகள் தான்!
அவ்வளவு இதமாக இதயத்தை
வருடுவது போல் இருக்கும்"
ஆனால் அன்று ஏனோ
பாடம் அவன் இதயத்தைத்
வருடவில்லை!
அவளல்லவா அங்கே இருந்தாள்
ஏதோ ஓர் உணர்வில்
அவன் நிமிர்ந்து
ஜன்னல் வழியே வெளியே
பார்த்தான்!
சற்று தூரத்தில் அவள்........
தன் தோழிகளோடு
இலைகளிடையே மலரினைப்போல்
உரையாடிக் கொண்டிருந்தாள்
அவளுக்குப் பாடவேளை
இல்லை போலிருக்கிறது..
இங்கே பார்ப்பாளா எனக்
கவனிக்க ஆரம்பித்தான்..
அவள் சட்டென ஜன்னல்பக்கம்
பார்த்தாள்....இருவரின்
பார்வைகள் கலந்தன!
இதயத்தில் ஏதோ
இனம்புரியா மகிழ்ச்சி!
பார்வையிலேயே கேள்விகள்...
விசாரணைகள்..
வெளியே வரச்சொல்லி
சைகை செய்தாள்
கொஞ்சம் பொறு என்று
இங்கிருந்தே கூறினான்!
பாடவேளை ஒருவழியாக
முடிவடைந்தது..
வேகமாய் எழுந்து வெளிச்
சென்றான்...
"என்ன அனு ஃப்ரி அவரா..."
"ஆமா உங்களுக்கு?"
"எனக்கு கிளாஸ் இருக்கு... என்ன
விஷயம் சீக்கிரம் சொல்லுங்க அனு"
"கவிதை பார்த்தேன்
புத்தகத்திலே அதான்
கங்கிராஜூலேஷன் பண்ணலாம்னு"
"ஓ! தேங்க்யூ வெரிமச்...."
அதற்குள் அடுத்த
பாடவேளைக்கான
பேராசிரியர் வந்து கொண்டிருந்தார்
"சரி நீங்க கிளாஸ் போங்க
ஈவ்னிங் பார்க்கலாம்"
அரை மனத்துடன் அங்கிருந்து
நகர்ந்தான்...

அடுத்தடுத்து வந்த நாட்களில்
அவர்களின் நட்பு பலப்பட்டது.
கருத்துக்களும்
விமர்சனங்களும்
அலசல்களுமாய் நிறையப்
பேசினார்கள்!
அவனைப் பற்றி
அவளைப் பற்றி
கவிதை பற்றி
காதல் பற்றி
நாட்டைப் பற்றி...
அவளைப் பார்க்கும்
போதெல்லாம் அவனுள் ஒரு
உற்சாக ஊற்று ஓட ஆரம்பித்தது!

பார்க்காத நாட்களில்
சோகமானான்
பார்க்கும் நாட்களில்
பரவசமானான்..
வாழ்க்கையின் வசந்தகாலம்
அவனுக்கு அந்த ஆறு மாதங்கள்!
கல்லூரியில் அவர்களின்
காலடி படாத இடங்கள் குறைவே!
மலர்களோடு மலர்களாய்..
கவரி வீசும் தென்னைகளின்
காற்றோடு கீதமாய்
மரத்தடியில், மணல்வெளியில்
புல்தரையில்..
எங்கேயும் அவர்கள்...
கல்லூரி மெதுவாகச்
சலசலக்க ஆரம்பித்தது!
மெல்ல வீசிய தென்றல்
புயலாக உருமாறிக் கொண்டிருந்தது!
......
அன்று அவன் வகுப்பறையில்
அமர்ந்திருந்தான்..
பேராசிரியர் உள்ளே இருந்தாலும்
பாடம் ஏனோ ஆரம்பமாகவில்லை!
அப்போது தான் அவள்
ஓடிவந்தாள்....
ஜன்னல் வழியே வெளியே பார்த்து
எழப்  போனான்...
அதற்குள் அவள்
ஓரமாக அமர்ந்திருந்த
மாணவனிடம், ஒரு காகிதம்
கொடுத்து இவனை நோக்கிக்
கைகாட்டிவிட்டுப்
பறந்து சென்றாள்..
என்னவாக இருக்கும்
எதுவும் விபரீதமாக...
அவனின் மனம் மிகுந்த
குழப்பத்தில் ஆழ்ந்தது!
அந்தக் காகிதம்
ஒவ்வொருவர் கையாக
மாறிமாறி இறுதியில்
அவனிடம் வந்தது!
அனைவரின் பார்வைகளும்
அவன் மேலேயே பதிந்து நின்றன..
கையிலேயிருந்த காகிதத்தையே
பார்த்து நின்றன!
மிக விரைவாகப்
பிரிக்கப் போனவன் தயங்கினான்!
அனைவரும் தன்னையே
பார்ப்பதை உணர்ந்து
அதை அப்படியே மடக்கிப்
பையில் வைத்தான்!
அந்த ஒரு மணிநேரம்
அவன் நரகத்தை அனுபவித்தான்..
கத்தியில் அமர்ந்திருப்பதைப்
போல் உணர்ந்தான்!
பாடவேளை முடிந்த
மணிச்சத்தம்!
துள்ளி எழும் கன்றாய்
வகுப்பறை விட்டு வெளிவந்தான்!
குழாயடி நெருங்கி ஒரு
மரத்தடியில் காகிதம் பிரித்தான்!
கண்கள் அதிர்ச்சியில்
அப்படியே நின்றன!
அதில்....அதில்...ஒன்றுமே
எழுதப்படவில்லை.
வெறுமையாக இருந்தது அந்தக்
காகிதம்!
மிகவும் குழப்பமாக
உணர்ந்தான்
தனித்தீவில் மாட்டிக்கொண்ட
மனிதனானான்
ஏன் இப்படிச் செய்தாள்?
வினாக்களே அவன்
உயிர் முழுவதும்!
....................
மாலை...
எப்போதும் அவர்கள் அமரும்
மரநிழலில் அவன்
அமைதியாக அமர்ந்திருந்தான்
வந்தாள்...நெருங்கினாள்..
அவன் முகத்தை மறுபுறம்
திருப்பிக் கொண்டான்!
"கோபமா அருண்"
"ஏன்...ஏன்...அனு இப்படிப்
பண்ணுன...நான்...நான்
எவ்ளோ ஃப்பீல் பண்ணினேன்
தெரியுமா?
உனக்கு ஒண்ணுன்னா என்னால
தாங்க முடியாது!
அதுல என்ன எழுதியிருப்பேன்னு
கற்பனை பண்ணி...குழம்பி...
ஏன் அனு இப்படிப் பண்ணுன"
அவனின் உணர்ச்சி வேகத்தில்
அவள் தடுமாறிப் போனாள்!
"ஐயம் சாரி....அருண்.....
நீங்க....நீங்க இவ்ளோ
எமோஷனல் ஆவிங்கன்னு நான்
எதிர்பார்க்கவே இல்ல
சும்மா விளையாட்டுக்குத்தான்
அப்படிப் பண்ணினேன்!
இவ்ளோ ஃபீல் பண்ணுவீங்கன்னு
தெரிஞ்சிருந்தா....நான்..."
உடைந்து போய் அழ ஆரம்பித்தாள்...
அவன் அமைதியாக அமர்ந்திருந்தான்!
நிமிடங்கள்
மௌனத்தில் கரைந்து
கொண்டிருந்தன!
அழுகையோடு அவள் நிமிர்ந்தாள்
"மன்னிக்க மாட்டீங்களா
அருண்...
பேச மாட்டீங்களா?"
நிமிர்ந்து அவளைப் பார்த்தான்
பின் எதுவுமே பேசாமல்
எழுந்து நடக்க ஆரம்பித்தான்
அதிர்ச்சியுடன் மனதில்
பொங்கிய அழுகையுடன்
அவன் சென்ற திசையையே
பார்த்து இருந்தாள்.
..........

"ஏய் என்னாச்சுடா
ஏன் இப்படி என்னவோ
போல இருக்க?"
"நண்பனின் குரல் கேட்டவுடன்
கயிறறுக்கப்பட்ட கன்றாக...
குமுறலாக அனைத்தையும்
கூறிமுடித்தான்
"அந்த ஒரு மணி நேரத்தில்
எவ்ளோ நெனச்சேன் தெரியுமா
என்னென்னமோ ஃபீலிங்ஸ்
ரொம்பக் கலங்கிப் போயிட்டேன்டா"
"டேக் இட் ஈஸிடா
விளையாட்டுக்கு தானே செஞ்சா
ஆமா நீ ஏன்டா
பேசாம வந்த? அவ ரொம்ப
ஃபீல் பண்ணுவா இல்லை!"
"ஆமாடா அவ அழுதது
எனக்கு மனசே பிழிஞ்சிட்டது
என்ன பண்றதுன்னே தெரியலே!"
"டேய் ஒருத்தி ஒருத்தனோட
விளையாடறான்னா
அவன் ரொம்ப நெருக்கமாயிட்டான்னு
அர்த்தம்... அதுக்கும் மேல
எந்த பொண்ணுமே தனக்கு
நெருக்கமில்லாத ஒருத்தன்
முன்னாடி அழமாட்டாடா!
இதுலேர்ந்து என்ன தெரியுது!"
......................
"அவ உன்ன விரும்பறாடா..
நீ சொல்லிட்டியா
இல்லையா?"
"இன்னும் இல்லடா"
"போடா...போடா...இங்கே பார்
நீ என்ன செய்வியோ
ஏது செய்வியோ தெரியாது
நாளைக்கு அவகிட்ட
உன்னோட விருப்பத்தை
வெளிப்படுத்தற...ஈவ்னிங்
சந்தோஷமா எனக்கு
ட்ரீட் கொடுக்கிற ஓக்கே!.."

No comments:

Post a Comment