Friday, July 11, 2014

கல்லூரிக் காலங்கள் – கவிதைத் தொடர் சிற்பம்.. கவிதை.. ஓவியம் – 8



கல்லூரிக் காலங்கள் – கவிதைத் தொடர்
சிற்பம்.. கவிதை.. ஓவியம் – 8






அந்தக் குருவிக்கூடு
இப்போது முழுமை
அடைந்திருந்தது!
இவன் படுத்திருந்தான்
மேலே மின்விசிறி
பூமியின் சுழற்சியை
ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தது!
காற்றில் மேலேயிருந்து
தொங்கிக் கொண்டிருந்த
வைக்கோல்கள்
ஆடிக்கொண்டிருந்தன
அவனின் மனதைப்போலவே!
கையில் நண்பனின்
கவிதைகள்!

...................

வேகமாக அவன் உள்ளே
வந்தான்..
"டேய் சூர்யா என்ன இது
அதிசயமாயிருக்கு"
"ம் இன்னைக்கு ஹாஃப்-டே
லீவ்..டா..."
கட்டிலில் அருகில் அமர்ந்தான்
"ஏன்டா உடம்புக்கு ஏதாவது"
நெற்றியில் கைவைத்துப்
பார்த்தான்
"அதெல்லாம் ஒண்ணுமில்லடா
இதை நீ இன்னும் பார்க்கலையா?"
"எதடா?"
நீட்டப்பட்ட புத்தகத்தை
வாங்கிப் பார்த்தான்
கண்கள் விரிந்தன, அதில்
அவனின் கவிதை மாநிலத்திலேயே
முதல் பரிசு பெற்றிருந்தது!
"தேங்க்..காட்...எப்படி...எப்படிடா
நான் கவனிக்காம விட்டேன்?"
"ஆபிஸ்ல தான்டா எனக்கே
சொன்னாங்க!
கேட்டவுடனே எனக்கு
எவ்ளோ சந்தோஷம் தெரியுமா
லீவ் போட்டுட்டு அப்படியே
காலேஜுக்கு வரலாம்னு பார்த்தேன்
ஆனா உனக்கு
சர்ப்ரைஸா இருக்கட்டுமேன்னுதான்!"
"ஒரு நிமிஷம் இருடா
ஏதாவது ஸவீட் வாங்கிட்டு
வந்திர்றேன்"
"அங்க பாருடா"
...மேஜையின்மேல் ஃபைவ் ஸ்டார்
சாக்லட்டுகள் காத்திருந்தன!
"சூர்யா"...
கலங்கலோடு திரும்பினான்
"அருண் உன்னோட
நண்பன்னு சொல்லிக்க
எனக்கு எவ்வளவு,
பெருமையா இருக்கு தெரியுமா?
ஆனா இப்பெல்லாம்
ரொம்ப மாறுதலா எழுதறேடா,
இவ்ளோ அருமையா நீ
காதல் கவிதை எழுதுவேன்னு
எனக்குத் தெரியாதே,
இப்ப இந்தக் கவிதையைப்
பார்க்காட்டி இதை நீ
எழுதியிருப்பேன்னு
நான் நம்பியிருக்கவே மாட்டேன்
எப்ப இருந்து இப்படியெல்லாம்?"
"அது வந்து........வந்து"
"புரியுதுடா புரியுது
அந்தக் கவிதைல கடைசி லைன்ஸ்
சூப்பர்டா,
"மனத்துடன் சேர்ந்து
கையும் நடுங்கியது......
என்ன எழுதியிருப்பாள்?
நண்பா என்றா
அன்பே என்றா?
என்ன எழுதியிருப்பினும்,
நண்பா என்றால்
காதல் கலையும்
அன்பே என்றால்
நட்பு முடிவுறும்,
இரண்டில் ஒரு முடிவை
எதிர்பார்த்து பேண்டிற்குள்
கைவிட்டேன்!

.......

பர்ஸ்..பர்ஸ்... அது எங்கே?
பேண்ட் பாக்கெட்டில்
நேர்த்தியான பிளேடு கீறல்
பதறினேன்...கதறினேன்
என்னவளே நீ
என்னவென்று எழுதியிருந்தாய்
நண்பா என்றா? அன்பே என்றா?
இன்றுவரை தெரியவில்லை"
நல்லாமுடிச்சிருக்கேடா,
நான்கூட இப்படி எதிர் பார்க்கலே!
ஆமா கவிதையோட
முடிவு என்னடா?"
ஆவலோடு அவனைப் பார்த்தான்
அவன் சிரித்தான்
"எனக்கே தெரியலேடா"
"என்னடா சொல்ற?"
"நிஜங்களை ரொம்பநாள்
மறைக்க முடியாதுடா
அன்னைக்கு நீ கேட்டப்ப
என்னால சொல்ல முடியல,
ஆனா இப்ப சொல்றேன்
அவளை நான் விரும்பறேன்
ஆனா அவ என்ன விரும்பறாளா
இல்லையான்னு தெரியலையே!
அதனாலதான் அப்படி முடிச்சேன்"
"அருண் உனக்கென்னடா,
படிப்புலேயும் சரி
ஒழுக்கத்திலேயும் சரி
உன்னைவிட யாருடா?
எதிர்காலத்தில் ஒரு
பெரிய கவிஞனாகப் போகிற
உன்னக் கட்டிக்க அந்தப்
பொண்ணுதான்டா
கொடுத்து வைச்சிருக்கணும்"
"அதுக்கில்லடா
அவ என்னை ஒரு நண்பனா
நெனச்சுதான் பழகுறா
இப்பப் போய்
நான் உன்னை லவ் பண்றேன்னு
சொல்லி
அவ மறத்துட்டா, அதவிட
நீங்களா அருண் இப்படின்னு
கேட்டுட்டா என்னால
தாங்கிக்க முடியாதுடா!"
"என்னோட அறிவார்ந்த
முட்டாளே
பொண்ணுங்கல்லாம்
அப்படித்தான்
சுலபமா காதலை ஏத்துக்கவே
மாட்டாங்க! மனசுல விரும்புவாங்க!
வெளிப்படுத்த மாட்டாங்க!
ஆனா ஒரு தடவை ஒரு தீர்மானம்
எடுத்துட்டாங்கன்னா
வாழ்க்கை முழுக்க
மாத்திக்கவே மாட்டாங்க
"அது தான்டா எனக்கும்
பயமாயிருக்கு!
அவ என்ன ஒரு நண்பனா
தீர்மானிச்சிருந்தா
காதலனா எப்படிடா ஏத்துக்குவா?"
"அப்ப ஒன்னு செய்"
"என்ன?
இன்னும் ஆறுமாசமோ ஏழுமாசமோ
அவகூடப் பழகி அவளோட
கேரக்டரை நல்லா புரிஞ்சுக்க
ஃபிரண்ட்-ஆ பழகுறாளா
காதலிக்கிறாளான்னு நல்லா
தெரிஞ்ச பிறகு உன்னோட
முடிவை அவகிட்ட சொல்லு!
ஆனா ஒன்னு மட்டும் நல்லாத்
தெரிஞ்சுக்க! அருண்
காதலோட அடிப்படையே
ஃபிரண்ட்ஸிப்-தான்
ஒருத்தியப் பார்த்தவுடனே
"காதல்" எல்லாம்
காவியத்துக்கு வேணும்னா
சரியா இருக்கலாம்
நடைமுறைக்கு ஒத்துக்காது!
ஒருத்தியோட பழகாம
அவளப்பத்தித் தெரிஞ்சுக்காம
எப்படிடா அவளை
மனைவியா ஏத்துக்கறது?
பிராப்பரா பழகி
இரண்டு பேருக்குமே
ஒருத்தர ஒருத்தருக்கு பிடிச்சிருந்தா
அதுதான்டா வெற்றிகரமான
"காதல்"
அதற்கு அடிப்படை பிரண்ட்ஸிப்தான்
ஏன்னா பார்த்தவுடனே
ஒருத்திகிட்டப்போய் ஐ...லவ்..யூ
சொன்னா செருப்பைத்தான்
எடுத்துக்காட்டுவா
நீ யாருன்னு அவ புரிஞ்சுக்கணும்
அதற்குப்பிறகு இரண்டு பேருக்கும்
ஒத்து வந்தாத்தான்
எதுவுமே சாத்தியம்!"
நண்பனுடைய
தீர்க்கமான கருத்துக்களில்
அவன் லயித்திருந்தான்
"அருண் நீ எதுக்குமே
கவலைப்படாதே
டிகிரிமட்டும் முடி ஒரு நல்ல
வேலைக்கு நானே ஏற்பாடு செஞ்சிடறேன்"
"சூர்யா" நெகிழ்ச்சியுடன்
முன்னால் வந்தான்..
"நான் இதுவரைக்கும்
எழுதுன கவிதைகளிலே
சிறந்த கவிதை
நீதான்டா!"
"ம்..போதும்டா
செண்டிமெண்ட்டுக்குப் போகாத
இதையும் பிரிச்சுப்பார்"
"என்னடா இது.." ஆவலோடு
அவன் கொடுத்த அந்தப்
பரிசுப் பார்சலைப்
பிரித்துப் பார்த்தான்...ஒரே மாதிரியான
இரண்டு அழகான டைரிகள்
அதில் இருந்தன!
"காகிதத்தில் எழுதி எழுதி
இனி பறக்க விடாத
இதுல அழகா
எழுதி வைச்சுக்க என்ன!
அதுலயும் இனிமே "காதல்கவிதை"
வேற எழுதப் போற! டேய்
ஒரு டைரி எனக்குடா!"
நண்பர்களின்
சிரிப்பலைகள் அந்த அறையில்
எதிரொலித்துக் கொண்டே
இருந்தன.

No comments:

Post a Comment