11. 88 winning words - Body Language
வாழ்வில் வெற்றிகள் குவிய நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய அடுத்த மந்திரச் சொல் உடல் மொழி. நாம் பேசுவதை விட நம்முடைய உடல் அதிகம் பேசுகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், வாய் சில.. ஏன் பல சமயங்களில் பொய் பேசுகிறது.. உடல் எப்போதுமே உண்மையையே பேசுகிறது என்பது தான்.
அப்படியானால் நாம் ஜெயிக்க இரண்டு விஷயங்கள் செய்தாக வேண்டியிருக்கிறது.
1. நம்முடைய உணர்ச்சிகளை நம்முடைய உடல்மொழி மூலம் அடுத்தவர்கள் அதிகமாகப் புரிந்து கொள்ள இடம் தராமலிருப்பது.
2. அடுத்தவர்களின் உடல் மொழியை முடிந்தவரை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடப்பது.
காதலர்களுக்குக் கண்களும், முகமுமே 80% மொழியைப் பேசி விடுகின்றன. வாய் மொழி 20% தான். இதே போல் பெரிய பெரிய நிறுவனங்களில் பணியாற்ற, மிகப்பெரிய அரங்குகளைச் சமாளிக்க, மிக முக்கியமான கலந்துரையாடல்களை எதிர்கொள்ள உடல்மொழி என்பது மிக முக்கியம். உடல் மொழியைப் படித்தவர்கள் மிகப்பெரிய வெற்றி பெறுகிறார்கள். அதைப் புரிந்து கொள்ளத் தவறியவர்கள் தோல்வியுறுகிறார்கள். மிக முக்கியமான தேர்தல் அது.. உங்களுக்கு வாக்களிக்கிறேன் என்று 10ல் 7 பேர் கூறி விட்டனர். தேர்தல் வருகிறது. நீங்கள் எடுத்தது மொத்தமே 3 வோட்டுகள் தான். ஏன் இப்படி? நீங்கள் வாக்கு கேட்கும் போதே அவர்களின் உடல் மொழியைச் சரியாகக் கணித்திருந்தால் இந்தத் தோல்வி வந்திருக்காது. அதே போல் பணம் கொடுக்கிறேன் என்று கடைசி நிமிடத்தில் கொடுக்காதவர்கள், நானாச்சு டிக்கெட் வாங்க என்று கூறி கடைசியில் கழுத்தறுத்தவர்கள் என்று பல கடைசி நிமிட ஏமாற்றங்களைத் தவிர்க்க, மற்றவர்களைச் சரியாக எடை போட, உங்களின் வெற்றியின் விழுக்காடுகளை அதிகமாக்கிக் கொள்ள உடல் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள். அது எளிதான ஒன்று தான்.
No comments:
Post a Comment