கல்லூரிக் காலங்கள் – கவிதைத் தொடர்
சிற்பம்.. கவிதை.. ஓவியம் –5
நாட்களில் என்ன
நல்லநாள் கெட்டநாள்
எல்லாம் நாம் பிரித்தது
தானே!
ஆனாலும் இந்த
வெள்ளிக்கிழைக்கு
மட்டும்
ஏதோ ஒரு புனிதத்தன்மை
இருக்கத்தான் செய்கிறது!
வெள்ளி என்றவுடன்
ஒரு சிலிர்ப்பு,
திருப்தி, நிறைவு!
சனி ஞாயிறு விடுமுறை
என்ற
மாணவ மாணவியர்
குதூகலம், கொண்டாட்டம்!
மங்கையர் தலைநீராடி
கோவில் செல்லும்
பரபரப்பு, பளபளப்பு
ஆடவரின் அலுப்புக்குறைந்து
ஒரு விடுதலை மூச்சு!
இயந்திரமாக
இருக்கும் மனிதன்
இந்த இரண்டு நாட்களில்தான்
மனிதனாக மாற
முயற்சி செய்வான்
........................
காற்றாடியின்
ஒசையில் காகிதங்கள்
படபடக்க,
எப்போதும்
தான் கவிதை எழுதும்
மேஜையில் அவன்!
சுற்றிலும் சில
புத்தகங்கள்..
காகிதங்கள்..
காற்றாடியின் சுழற்சிக்கு
ஒரு காகிதம்
மேஜை விளிம்பிலிருந்து
இருக்கட்டுமா?
பறக்கட்டுமா?
என்று படபடத்துக்
கொண்டிருந்தது!
எழுதுகிறானா என்ன?
அவ்வப்போது பார்வை
மேலே அலைமோதுகிறது!
நெற்றியில் தட்டுகிறான்.
எதையோ இழந்துவிட்ட
அல்லது பெற்றுவிட்ட
ஒரு இருப்புக்
கொள்ளாத
நிலையில் அவனிருந்தான்!
வாசலில் வண்டிச்சத்தம்.........
"டேய் என்னடா
புறப்படல?
இன்னைக்கு ஃபில்ம்
போகலாம்னு சொல்லியிருந்தேன்ல!"
"வாடா, காபி
அடுப்புல இருக்கு
குடிச்சிட்டிரு
நான்
கிளம்பிர்றேன்!"......தயங்கினான்
ஆமா இன்னைக்குக்
கண்டிப்பா போகணுமா?
அவன் நெருங்கினான்
"என்னாச்சுடா
உனக்கு?
நீதான அந்தப்படம்
கண்டிப்பா பார்க்கணும்
டிக்கட் வாங்கிட்டு
வாடான்னு
சொன்ன!
நானும் ரிசர்வ்
பண்ணிட்டு
வந்துட்டேன்!"
"சரிடா, நீ
காபி குடி
நான் முகம் கழுவி
டிரஸ் பண்ணிட்டு
வந்திர்றேன்"
நகன்றான்!
இவன் அவன் அமர்ந்திருந்த
மேஜை அருகில் வந்தான்!
அந்த ஒரு விஷயம்
அவனைக் கவர்ந்தது
ஆச்சர்யப்படுத்தியது
யோசிக்க வைத்தது!
காகிதங்களின் நடுவே
அந்த வாடிய ரோஜா
சுற்றிலும் கசக்கி
எறியப்பட்ட
காகிதங்கள்!
"அனு"
என்ற பெயர்
ஒன்றில் அழகாக
எழுதப்பட்டிருந்தது?
முதன்முதலாக இவனுக்கு
இதயம் வியர்க்க
ஆரம்பித்தது!
"போலாமாடா"
அவனின் குரல்"
மேஜையிலிருந்து
சட்டென்று நகர்ந்தான்!
புது மனிதனாக அவன்
வெளிப்பட்டான்!
வாகனம் கிளம்பும்
சத்தம்.........
இரவு...,
தனிமையான சாலை
"அருண் காபி
குடிச்சிட்டுப்
போலாம்டா லைட்டா
தலைவலிக்கிற மாதிரி
இருக்குது"!
பிளாட்பார்ம்
விளக்கொளியில்
காபி அருந்தினார்கள்..
"ஏண்டா டல்லாயிட்ட?
படத்தோட தீம் ரொம்ப
கனமானது இல்ல!
எனக்கும் கூட இன்னமும்
மனசு எப்படியோதான்
இருக்கு"
"அருண் ஃபீஸ்
கட்டிட்டியா"
"ஒ! ரொம்பத்
தேங்ஸ்டா
ஆனா, நான் இதுக்கு........"
கலங்கினான்
"இதுக்குப்போய்
ஏன்டா..
அருண் நீ எனக்கு
நண்பனா
கிடைச்சது என்னோட
பாக்கியம்டா
தெருத்தெருவா வேலையில்லாம
அலைஞ்சிட்டிருந்த
நான்
இன்னைக்கு ஒரு
மனுசனா நிக்கிறன்னா
அதுக்கு காரணம்
நீ தான்டா!"
"டேய் என்னடா...."
"இல்லடா கொஞ்சம்
யோசிச்சுப் பாரு
அன்னைக்கு மட்டும்
நீ வர்றதுக்கு
கொஞ்சம்
லேட்டாயிருந்ததுன்னா
நான்........நான்..........உயிரோட
எப்படிடா இருந்திருப்பேன்?..
தற்கொலை செஞ்சுக்கப்
போன ஒரு கோழையைக்
காப்பாத்தி, நம்பிக்கை
ஊட்டி
இன்னைக்கு ஒரு
மனுசனா
மாத்தினது நீ தானடா!"
இருவரும் உணர்ச்சியின்
உச்சக்கட்டத்தில்
நின்றார்கள்
"உனக்காக
என் வாழ்க்கையிலே
நான் எத வேணும்னாலும்
செய்வேன் அருண்!
ஒரு கவிஞனோட நண்பன்னு
சொல்லிக்கிறதுல
எனக்கு எவ்ளோ பெருமை
தெரியுமா?.......ஆனா
ஏதாவது ஒரு காரனத்துக்காக
நீ என்னப் பிரிஞ்சிட்டா
அத......அத........என்னால
தாங்கிக்க முடியாதுடா?"
"டேய்........ஏன்டா,
என்னடா ஆச்சு
ஏன் இன்னைக்கு
இப்படியெல்லாம்
பேசுற?"
"என்னமோ தெரியலடா
இன்னைக்கு இதெல்லாம்
உன்கிட்ட
சொல்லனும் போல
இருந்துச்சு"
தோளைத் தொட்டுத்
திருப்பினான்
அவனின் கண்ணிலும்
கண்ணீர் மொட்டுக்கள்!
"ஏய் என்னடா?
நீ எதுக்குடா
கண் கலங்கிற?"
"இல்ல சூர்யா!
நீ எல்லாத்தையும்
வெளியே
கொட்டிட்ட..........ஆனா
நான்
மனசிலேயே வெச்சிருக்கேன்!
அவ்ளோதான்!
என்னோட அப்பா,
அம்மா
எல்லாம் ஊர்ல இருந்தாலும்
நான் கவலையில்லாம
இங்க
இருக்கேன்னா
அதுக்கு காரணம்
நீதான்டா!
என்னோட அப்பா,
அம்மா
எல்லாமே இங்க எனக்கு
நீதான்டா...."
இரு நண்பர்களின்
நட்புக்கடலில்
உணர்ச்சி அலைகள்
பொங்கிப் பிரவாகமாய்
எழுந்தன!
உலகில் நட்பு என்பது
எவ்வளவு பலம் வாய்ந்தது!
அது ஒன்றுதான்
எதையுமே எதிர்பார்க்காதது!
பெற்றெடுத்த
தாய் தகப்பன் கூட
ஒரு குறிப்பிட்ட
வயதில்
ஓரங்கட்டப்பட
நண்பனே எல்லாமாக
விளங்குகிறான்!
பெற்றோருக்குத்
தெரியாத
எவ்வளவோ விஷயங்கள்
நண்பர்களிடம் தான்
பரிமாறிக் கொள்ளப்படுகின்றன!
அந்த இரு நண்பர்களின்
நட்புக்கடலில்
உணர்ச்சிப் புயலுக்குப்பின்
ஓய்வு!
ஆனால் சஞ்சலமான
சிற்றலைகள் போல்
இவனின் மனதில்
மட்டும்
மேஜையில் பார்த்த
அந்த வாடிய ரோஜாவும்
கசங்கிய காகிதங்களும்
"அனு"
என்ற பெயரும்
அலையடித்துக் கொண்டே
இருந்தன!
No comments:
Post a Comment